விளையாட்டு வீரர்களுக்கு சிவந்தி ஆதித்தனார் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும்


விளையாட்டு வீரர்களுக்கு சிவந்தி ஆதித்தனார் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும்
x

விளையாட்டு வீரர்களுக்கு சிவந்தி ஆதித்தனார் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரூர்

கரூரில் நேற்று ஒரு தனியார் மண்டபத்தில் கரூர் மாவட்ட தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா, நாடார் மகாஜன சங்க தேர்தலில் என்.ஆர்.தனபாலன் அணியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, நாடார் சமுதாய வளர்ச்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை ஆலோசனை கூட்டம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட தலைவரும், சோமூர் ஊராட்சி மன்ற தலைவருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராம கோவிந்தன், கரூர் மாநகர தலைவர் அலமேலு டெக்ஸ் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் லோகநாதன், கொங்கு மண்டல தலைவர் கூடலரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு நாடார் பேரவை கடந்த 30 ஆண்டுகளாக கள்ளை இறக்கி விற்று கொள்ளும் உரிமையை கேட்டு போராடி வருகிறோம். கள்ளுக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் நிச்சயமாக ஆர்ப்பாட்டம் நடத்துவோம். தனது வாழ்நாள் முழுவதும் விளையாட்டிற்கென்று பாடுபட்டவர் சிவந்தி ஆதித்தனார். கபடி போட்டியை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க வைத்தார். மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருது, கேல்ரத்னா விருது வழங்குவது போன்று, தமிழக அரசு சிவந்தி ஆதித்தனார் நினைவாக தமிழகத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு சிவந்தி ஆதித்தனார் பெயரிலேயே விருதுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றோம் என்றார்.

விழாவில் பனை தொழிலாளர்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உரிமம் வாங்கி, கள் இறக்கும் தொழிலை நடத்திட அரசை வலியுறுத்துவது, கரூரில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கரூர் மனோகரா கார்னர் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், தெற்கு மாநகர தலைவர் காமராஜ், கிழக்கு மாநகர செயலாளர் சேகர், மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட கரூர், திருப்பூர், காங்கேயம், வெள்ளகோவில், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் மாநகர செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.


Next Story