நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் சாவு


நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் சாவு
x

நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் உயிரிழந்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடர்ந்த முந்திரி வனப்பகுதிகள் பசுமையான வயல்வெளிகள் என பல்வேறு இயற்கை சூழ்நிலையில் புள்ளிமான், மயில், முயல், நரி உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பரவலாக சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் எதிர்பாராத விதமாக அடர்ந்த வனப்பகுதியில் இருந்து கிராமப்பகுதிக்குள் விலங்குகள் மற்றும் பறவைகள் வந்து சிக்கிக்கொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது. இதுபோல் நேற்று காலை சுத்தமல்லி அணை பகுதியில் உள்ள கார்குடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பூவந்திகொல்லை கிராமத்தில் சுமார் 3 வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று ஊர் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த சில நாய்கள் அந்த மானை கடித்து குதறின. இதனைப் பார்த்த அருகில் இருந்த கிராம மக்கள் நாய்களை விரட்டிவிட்டனர். இதில் மான் பலத்த காயம் அடைந்தது. உடனடியாக அந்த மானை மீட்ட அப்பகுதி மக்கள் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பலத்த காயமடைந்திருந்த மான் சிறிது நேரத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது. தா.பழூர் போலீசார் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் உயிரிழந்த மானின் உடலை மீட்டு பரிசோதனைக்கு பிறகு சுத்தமல்லி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புதைத்தனர். நாய்கள் கடித்து புள்ளிமான் ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து தா.பழூர் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story