கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் சாவு


கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் சாவு
x

மானூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

திருநெல்வேலி

மானூர் அருகே உள்ள வடக்கு செழியநல்லூரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். விவசாயியான இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை வனச்சரகர் சரவணன் தலைமையில், வனச்சரகர் சங்கர் ராஜ், வனக்காப்பாளர் சுப்புலட்சுமி, வன வேட்டை தடுப்பு காவலர் பூல்பாண்டி ஆகியோர் அங்கு சென்றனர்.

பின்னர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி புள்ளிமான் உடலை வெளியே கொண்டு வந்தனர். அந்த மான் இரை தேடி வந்தபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயத்தில் வைத்து மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் கடும் வெப்பம் நிலவுவதால் அருவி, நீரோடைகள் தண்ணீர் இன்றி வறண்டு வருகின்றன. மரங்களும் காய்ந்து வருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் மலையடிவார கிராமங்களில் புகுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடமான்கள், செந்நாய்கள் கூட்டமும் அதிகளவில் மலையடிவார பகுதிக்கு இடம்பெயர்ந்து உள்ளது. அவ்வாறு வந்துள்ள கடமான்களை செந்நாய்கள் வேட்டையாடி தின்னும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

களக்காடு மலையடிபுதூருக்கு மேற்கே உள்ள தாமரைகுளத்துக்கு தண்ணீர் அருந்த வந்த கடமானை செந்நாய்கள் கடித்து குதறி கொன்று உள்ளன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே வனப்பகுதியில் கோடை காலங்களில் வனவிலங்குகள் நீர் அருந்தும் வகையில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story