குலதெய்வ கோவிலில் வழிபட்ட இலங்கை எம்.பி ராதா கிருஷ்ணன்

துறையூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலில் இலங்கை எம்.பி ராதா கிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் பிச்சாயி அம்மன் வீரபத்திரசுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நேற்று திடீரென்று இலங்கை எம்.பி ராதா கிருஷ்ணன் சாமி தரிசனம் செய்ய வந்தார். இந்த கோவில் அவருக்கு குலதெய்வ கோவில் என்று கூறப்படுகின்றது. எம்பி ராதா கிருஷ்ணன் சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
இலங்கையில் ராஜபக்சே அரசு கொண்டுவந்துள்ள 20-வது சட்டத்திருத்தத்தினால் அனைத்து அதிகாரங்களும் பிரதமர் இடத்தில் கொடுக்கப்பட்டது. அதன் காரணமாக ராஜபக்சே எடுத்த சர்வாதிகார முடிவினால் தான் இலங்கை பொருளாதார கடுமையாக பாதிக்கப்பட்டு வீழ்ச்சி அடைந்தது.
இதனால் பெட்ரோல், டீசல், பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு இலங்கைவாழ் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பேரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள். இலங்கையில் தற்சமயம் உள்ள நிலை சரி செய்ய தமிழக அரசும் இந்திய அரசாங்கமும் போதுமான நிவாரண உதவிகளை செய்து வருவதற்கு இலங்கை மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






