ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்
மழை காரணமாக ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. மீ்ண்டும் இன்று காலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம்:
பிரசித்தி பெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் பூவராகசுவாமி, அம்புஜவல்லி தாயார், உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத யக்ஞவராக சாமிக்கு நானாவித பொருட்களை கொண்டு சிறப்பு திருமஞ்சன அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு உற்சவமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளினர். தீப, தூப ஆராதனைகளுக்கு பிறகு 6:27 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், வட்டார ஆத்மா குழு தலைவரும், ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான தங்க.ஆனந்தன், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி தலைவர் செல்வி ஆனந்தன், முன்னாள் அறங்காவல் குழு தலைவரும், அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளருமான பூமாலை சண்முகம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூ.செல்வக்குமார், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆ.முத்துராமலிங்கம், ஆனந்த.பார்த்திபன், வர்த்தகர் சங்க பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் விண்ணை பிளக்க வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேர் வடக்கு ரத வீதியை கடந்து கீழ் மாத்வ வீதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்து எதிர்பாராத விதமாக கிழக்கு பக்கம் இறங்கி விட்டது. மீண்டும் தேரை சரியான பாதைக்கு கொண்டு வர சில மணி நேரங்கள் தாமதமானது.
பாதியிலே நிறுத்தம்
தொடர்ந்து தேர் தெற்கு ரத வீதி வழியாக கடைவீதி, பழைய போலீஸ் நிலையம் அருகே இரவு 7.30 மணிக்கு வந்த போது, லேசான மழை தூறல் விழுந்தது. அத்துடன் தேரோட்டத்தை நிறுத்திய விழாக்குழுவினர் நாளை(அதாவது இன்று) காலை 6 மணிக்கு தேரோட்டம் மீண்டும் தொடரும் என்று அறிவித்தனர்.
இதையடுத்து தேருக்கு சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவில் ஊழியர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழா ஏற்பாடுகளை தக்கார் மாலா, இந்து சமய அறநிலையத்துறை செயல் இயக்குனர் செல்வமணி, மூர்த்தி உள்ளிட்ட ஆலய சிப்பந்திகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்