ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில்கைலாசநாதர் கோவிலில் சித்திரை திருவிழா


தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் கைலாசநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்.

சித்திரை திருவிழா

நவகைலாய கோவில்களில் ஆறாவது ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சுவாமி கைலாசநாதரும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர், கொடி பட்டம் சுற்றிவரப்பட்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் குருநாத பட்டர், ஐயப்ப பட்டர், அரவிந்தன், மணி, கோவில் நிர்வாக அதிகாரி கண்ணன், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, கோவில் பணியாளர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பச்சை சாத்தி வீதி உலா

திருவிழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே.1-ந்தேதி இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தி திருவீதி உலாவும், மே.2-ந்தேதி காலை 9 மணிக்கு பச்சை சாத்தி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.


Next Story