எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை,
திருச்சி அடுத்த நவல்பட்டு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பைக்கில் சென்ற சிலர் ஆடுகளை திருடிச்சென்றதை கண்டு துரத்தியுள்ளார். அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மணிகண்டன், 9 மற்றும் 14 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட மூவரை கைது செய்தனர். சிறுவர்கள் மீதான தனி வழக்கு திருச்சி சிறார் நீதிமன்றத்திலும், மணிகண்டன் மீதான வழக்கு புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றம், குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.