எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 23,132 மாணவ, மாணவிகள் எழுதினர்
தமிழகம் முழுவதும் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 23,132 மாணவர்கள் எழுதினர். 192 பேர் தேர்வு எழுத வரவில்லை.
நாகர்கோவில்,
தமிழகம் முழுவதும் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 23,132 மாணவர்கள் எழுதினர். 192 பேர் தேர்வு எழுத வரவில்லை.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 3-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்தநிலையில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது.
இந்த தேர்வை குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய 2 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 23,324 பேர் எழுத தயாராக இருந்தனர். இவர்களுக்காக 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
அதன்படி நேற்று தமிழ் மற்றும் மலையாள மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது. தமிழ் தேர்வை 23,128 பேரும், மலையாள மொழிப்பாட தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 4 பேரும் எழுதினர். இதன் மூலம் நேற்று நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 23,132 பேர் எழுதினர். ஆனால் 192மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
ஆசிரியர்-பெற்றோரிடம் வாழ்த்து
பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவிகளில் சிலர் தேர்வு நடைமுறை எப்படி இருக்குமோ? தேர்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறோமோ? என்ற மனநிலையோடு, மனக்கலக்கத்தில் தங்களது பெற்றோருடன் தேர்வு மையங்களுக்கு வந்ததை காண முடிந்தது. பல மாணவ-மாணவிகள் இந்த தேர்வு மூலம் 10-ம் வகுப்பை நிறைவு செய்து விட்டு, மேல்நிலைக்கல்விக்கு செல்லப்போகிறோம் என்ற எதிர்பார்ப்போடும், மகிழ்ச்சியோடும் தேர்வு மையங்களுக்கு சென்றனர்.
ஏற்கனவே தேர்வுக்காக வீட்டில் இருந்து படித்தவர்கள், தேர்வு மையங்களுக்கு வந்த பிறகும், தேர்வு அறைகளுக்கு செல்லும் வரை வளாகங்களில் இருந்தபடி பாடங்களை மும்முரமாக படித்தனர்.
அதே சமயத்தில் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளை அவர்களுடைய ஆசிரியர், ஆசிரியைகளும், பெற்றோரும் ஆசி வழங்கி வாழ்த்தியும், கடவுளை வணங்க செய்தும் அனுப்பி வைத்ததை காண முடிந்தது.
தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு
தேர்வானது காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடந்தது. நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதேபோல் மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர்.
தேர்வு அறைக்குச் செல்லும் முன்பு மாணவ, மாணவிகள் அணிந்து வந்திருந்த செருப்பு மற்றும் ஷூக்கள் தேர்வறைக்கு வெளியே கழற்றி வைத்துவிட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல் புத்தகப் பைகளும், எலக்ட்ரானிக் பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தேர்வு மையங்களில் முறைகேடு நடக்காமல் இருக்க தேர்வு கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாணவ, மாணவிகள் பேட்டி
மேலும் வினாத்தாள் எப்படி இருந்தது? என தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி வர்ஷா:-
தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. தோ்வில் அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதி உள்ளேன். தேர்வு எழுதுவதற்கு முன்பு சற்று பதற்றம் இருந்தது. ஆனால் வினாத்தாள் கையில் வந்தவுடன் அந்த பதற்றம் குறைந்தது. தேர்வை எளிதில் எதிர் கொள்ள எனது பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். பெரிய வினாக்கள் எழுத சற்று நேரம் அதிகமானது.
கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கிரிஜா:-
தேர்வு எழுதுவதற்கு முன்பு எனது மனநிலை சற்று அச்சத்துடன் இருந்தது. பாடத்திட்டத்தின் வெளியே இருந்து கடினமான கேள்விகள் கேட்கப்படுமோ என நினைத்திருந்தேன். ஆனால் அப்படி கேட்க படவில்லை. தமிழ் தேர்வு எளிதாக இருந்தது. முதலில் பெரிய வினாக்கள் அனைத்திற்கும் பதில் எழுதினேன். கடைசியில் சிறிய வினாக்களுக்கு பதில் அளித்தேன். தமிழ் தேர்வு எளிதாக இருந்தது போல இனிவரும் தேர்வுகளும் எளிதாக இருந்தால் நன்றாக இருக்கும்.
நாகர்கோவில் வடசேரி பகுதியை சோ்ந்த 10-ம் வகுப்பு மாணவன் அபிஷித்:-
தேர்வுக்காக கடைசி ஒரு மாதம் நன்றாக படித்திருந்தேன். தேர்வு மையத்திற்கு வரும் வரை சற்று பயமாக இருந்தது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பாடத்தேர்வு எளிதாக இருக்கும் என கூறுவார்கள். அதேபோல இந்த ஆண்டும் தமிழ் தேர்வு மிக, மிக எளிமையாக இருந்தது. பள்ளியில் ஆசிரியர்கள் தொடர்ந்து தேர்வுக்கான பயிற்சி அளித்தது, தேர்வு எழுதும் போது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பெரிய வினாக்கள் எழுத மட்டும் நேரம் அதிகம் ஏற்பட்டது.