எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாவட்டத்தில் 94.19 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாவட்டத்தில் 94.19 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நெல்லை மாவட்டத்தில் 94.19 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நெல்லை மாவட்டத்தில் 94.19 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 5-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி வரை நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 92 அரசு பள்ளிக்கூடங்கள், 85 அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் பள்ளிகள், 103 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என 280 பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள் 11,126 பேரும், மாணவிகள் 11,274 பேரும் ஆக மொத்தம் 22,400 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 10,156 பேரும், மாணவிகள் 10,942 பேரும் ஆக மொத்தம் 21,098 பேர் தேர்ச்சி பெற்றனர்.

வழக்கம் போல இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 94.19 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 29-வது இடத்தில் இருந்த நெல்லை மாவட்டம், இந்த ஆண்டு 9-வது இடத்துக்கு முன்னேறியது.

தேர்வு முடிவுகளை பெரும்பாலான மாணவ மாணவிகள் வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் பார்த்துக் கொண்டனர். ஒரு சில மாணவ-மாணவிகள் மட்டுமே பள்ளிக்கூடத்திற்கு வந்து தேர்வு முடிவுகளை பார்த்து ஆசிரியரிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 280 பள்ளிக்கூடங்களில் 103 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசு பள்ளிகள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பத்தமடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மணிமுத்தாறு அரசு உயர்நிலைப்பள்ளி, பொட்டல் அரசு உயர்நிலைப்பள்ளி, மாஞ்சோலை அரசு உயர்நிலைப்பள்ளி, வேளப்பனேரி அரசு உயர்நிலைப்பள்ளி, குவாச்சிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, மேலபிள்ளையார்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, கங்கைகொண்டான் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, கம்மாளங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, பாலாமடை அரசு உயர்நிலைப்பள்ளி, ரஸ்தா அரசு உயர்நிலைப்பள்ளி, கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஏர்வாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, முனைஞ்சிப்பட்டி குரு சங்கர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவேங்கடநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, தெற்கு கருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆத்துகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி, காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி, கஸ்தூரிரெங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, மாடம்பிள்ளை தர்மம் அரசு உயர்நிலைப்பள்ளி, காவல்கிணறு அரசு உயர்நிலைப்பள்ளி, சண்முகபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, செண்பகராமநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 23 அரசு பள்ளிகளில் படித்த மாணவ- மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

14 கைதிகள் தேர்ச்சி

பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் 14 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள். இதில் 14 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பாலசுப்பிரமணியம் என்பவர் அதிகபட்சமாக 413 மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற சிறை கைதிகளை சூப்பிரண்டு சங்கர், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் குமார், பிரபாகரன், ஜீவரத்தினம் ஆகியோர் பாராட்டினார்கள்.

பிளஸ்-1 தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 50 அரசு பள்ளிக்கூடங்கள், 61 அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் பள்ளிகள், 74 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என 185 பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள் 8,455 பேரும், மாணவிகள் 11,024பேரும் ஆக மொத்தம் 19,479பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 7,828பேரும், மாணவிகள் 10,693 பேரும் ஆக மொத்தம் 18,521 பேர் தேர்ச்சி பெற்றனர்.

வழக்கம் போல இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று இருந்தனர். மொத்தமாக 95.08 சதவீதம் பேர் பிளஸ்-1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

நெல்லை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 10-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

50 அரசு பள்ளிக்கூடங்களில் 5493 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 4999 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91 சதவீத தேர்ச்சி ஆகும்.

வெள்ளாங்குழி அரசு மேல்நிலைப்பள்ளி, சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி, சமூகரெங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.


Next Story