எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு நிறைவு; இன்பத்தில் திளைத்த மாணவர்கள்..!
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்த நிலையில் மாணவர்கள் துள்ளிக்குதித்து, மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 936 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர்.
இந்த தேர்வுக்கான வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததாகவும், நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றும் மாணவர்களும்-மாணவிகளும் நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்றுடன் தேர்வு முடிந்ததையடுத்து அவர்கள் இன்பத்தில் திளைத்தனர். தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்த போது, அவர்கள் முகம் மகிழ்ச்சியில் பூத்துக் குலுங்கியது. மாணவிகள் துள்ளிக்குதித்து, மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். சில மாணவர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் அநாகரீகமான முறையிலும், பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையிலும் நடந்துக் கொண்டதையும் பார்க்க முடிந்தது.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் 11-ம் வகுப்பு தேர்வு நாளையுடன் நிறைவடைகிறது.