கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12,029 பேர் எழுதினர்


கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை  12,029 பேர் எழுதினர்
x

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வினை 12,029 பேர் எழுதினர். தேர்விற்கு 408 பேர் வரவில்லை.

கரூர்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 60 மையங்களில் தமிழ் தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 8.30 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளி வரை கொண்டு வந்து விட்டு வாழ்த்துகளை கூறி அனுப்பி வைத்தனர்.

இதேபோல் ஆசிரிய, ஆசிரியைகளும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையினை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் ஒன்றாகவும், தனித்தனியாக அமர்ந்து படித்தனர். பின்னர் தேர்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

12,029 பேர் எழுதினர்

பின்னர் தேர்வறைக்கு சென்ற மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது-. தொடர்ந்து வினாத்தாள், விடைத்தாள் வழங்கப்பட்டு, தேர்வு தொடங்கியது. இத்தேர்வினை கரூர் மாவட்டத்தில் 188 பள்ளிகளை சேர்ந்த 6,100 மாணவர்களும், 6,062 மாணவிகளும், தனிதேர்வர்கள் 276 என என மொத்தம் 12,438 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்.

இதில் நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் 5,857 மாணவர்கள், 5,914 மாணவிகள், 258 தனி தேர்வர்கள் என 12,029 பேர் கலந்து கொண்டு எழுதினர். இதில் 242 மாணவர்களும், 148 மாணவிகளும், 18 தனிதேர்வர்களும் என மொத்தம் 408 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பறக்கும் படை

தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய 61 முதன்மை கண்காணிப்பாளர்களும், 61 துறை அலுவலர்களும், 15 வழித்தட அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 904 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

கரூர் மாவட்டத்தில் 115 நிலையான பறக்கும் படை மற்றும் ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி வந்து கண்காணித்தனர். தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கலெக்டர் ஆய்வு

கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மையத்தை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உடனிருந்தார்.

தேர்வு எழுத முடியாத சூழலில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுத தனியாக 210 ஆசிரிய-ஆசிரியைகள் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.


Next Story