:மின்சாரம் பாய்ந்து மாணவி காயம்

திருப்பூர் மாநகராட்சி பள்ளி கழிவறைக்கு சென்றபோது சம்பவம் :மின்சாரம் பாய்ந்து மாணவி காயம்
நல்லூர்,
திருப்பூர் மாநகராட்சி பள்ளி கழிவறைக்கு வகுப்பு இடைவேளையின் போது சென்ற மாணவி மீது மின்சாரம் பாய்ந்ததால் காயம் அடைந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவி
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துகுட்டி கிராமத்தை சேர்ந்தவர் டேவிட்ராஜ் (வயது 36). இவருடைய மனைவி ரூபிஜெனிபர் (31). இவர்களுடைய மகள்கள் ேஜாஸ்லின் ஹெனியா (14), மரியா சாலினி (11). இந்த நிலையில் டேவிட்ராஜ் தனது குடும்பத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் செரங்காடு பகுதிக்கு குடியேறினார்.
அதன்பின்னர் 2 பெண் குழந்தைகளையும் செரங்காட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் சேர்த்துள்ளார். இந்த பள்ளியில் ஜோஸ்லின் ஹெனியா 8-ம் வகுப்பும், மரியா சாலினி 6-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இந்த நிலையில நேற்று வழக்கம் போல் 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்றனர்.
மின்சாரம் பாய்ந்தது
பின்னர் வகுப்பு இடைவேளையில் பள்ளியில் இருந்த கழிவறைக்கு மாணவி ஜோஸ்லின் ஹெனியா சென்றுள்ளார். அப்போது அங்கு தொங்கிக்கொண்டிருந்த மின்சார வயர் மாணவி மீது பட்டது. இதில் அவருடைய வலது கையில் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவி கூச்சலிட்டார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் ஓடிவந்து அந்த மாணவியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, மாணவியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவிக்கு வலது கையில் மின்சாரம் பாய்ந்ததில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர். இச்சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
----------






