நரிக்குறவர்கள் 145 பேருக்கு எஸ்.டி சாதி சான்றிதழ்


நரிக்குறவர்கள் 145 பேருக்கு எஸ்.டி சாதி சான்றிதழ்
x

அரும்பருத்தி கிராமத்தில் நரிக்குறவர்கள் 145 பேருக்கு எஸ்.டி சாதி சான்றிதழ்களை செய்யாறு சப்-கலெக்டர் வழங்கினார்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு தாலுகா அரும்பருத்தி கிராமம் நரிக்குறவக் காலனியில் 95 குடும்பங்களில் சுமார் 225 பேர் வசித்து வருகின்றனர். நரிக்குறவ இன மக்களுக்கு அரசு சார்பில் மிகவும் பிற்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

நரிக்குற இன மக்கள் வாழ்க்கை, பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருவதால், அவர்களை மேன்மடைய செய்யும் வகையில் மத்திய அரசு பிறப்பித்துள்ள ஆணையின் பேரில், மாநில அரசு நரிக்குறவ இன மக்களுக்கு எஸ்.டி.சாதி சான்றிதழ்களை உடனடியாக வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் செய்யாறு சப்-கலெக்டர் ஆர்.அனாமிகா அரும்பருத்தி கிராமத்தில் நரிக்குறவ காலனியில் வசித்து வரும் 145 பேர் அளித்த விண்ணப்பங்களை பெற்று நேரில் சென்று வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அரும்பருத்தி நரிக்குறவக் காலனி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நரிக்குறவர்கள் 145 பேருக்கு எஸ்.டி. சாதி சான்றிதழ்களை சப்-கலெக்டர் ஆர்.அனாமிகா வழங்கினார்.

அப்போது நரிக்குறவ இன மக்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு, தெருவிளக்கு ஆகிய கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

நிகழ்ச்சியில் செய்யாறு தாசில்தார் வெங்கடேசன், வடதண்டலம் வருவாய் ஆய்வாளர் கலைமதி, கிராம நிர்வாக அலுவவலர் முத்துராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story