இந்து அமைப்பு தலைவருக்கு கத்திக்குத்து
வீரபாண்டியில் இந்து அமைப்பு தலைவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவர் இந்து திருக்கோவில் கூட்டமைப்பு தலைவராக இருந்து வருகிறார். செந்தில்குமார் கடந்த 14-ந்தேதி தனது மனைவி அனுராதாவுடன் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவை காண்பதற்காக வந்தார். அங்கு அனுராதாவுக்கும், திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த பவித்ரன் (21) உள்பட 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனை பார்த்த செந்தில்குமார், பவித்ரன் உள்பட 3 பேரையும் தட்டிக்கேட்டார். இதில், ஆத்திரமடைந்த பவித்ரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்தில்குமாரை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து அவர் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ரனை வலைவீசி தேடி வருகின்றனர்.