வண்டலூர் பூங்கா: மனித குரங்கு குட்டியின் பிறந்தநாள் 'கேக்' வெட்டி கொண்டாட்டம்
வண்டலூர் பூங்காவில் பிறந்த மனித குரங்கு குட்டியின் பிறந்தநாளை ஊழியர்கள் 'கேக்'வெட்டி கொண்டாடினர்
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.
பூங்காவில் உள்ள மனித குரங்கு ஜோடியான கொம்பி-கவுரிக்கு கடந்த ஆண்டு குட்டி பிறந்தது. இதற்கு பூங்கா ஊழியர்கள் ஆதித்யா என்று பெயர் வைத்து உள்ளனர். இந்த மனிதகுரங்கு குட்டி தனது தாயுடன் சேர்ந்து செய்யும் சேட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆதித்யா குட்டியை, தாய் குரங்கு எப்போதும் தன்னுடனே வைத்து கவனித்து வருகிறது.
இந்த நிலையில் ஆதித்யா மனிதகுரங்கு குட்டிக்கு நேற்று முதல் பிறந்த நாள் ஆகும். இதனை பூங்கா ஊழியர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். மனித குரங்கு உள்ள இருப்பிடம் அருகே பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா மற்றும் ஊழியர்கள், பார்வையாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
அந்த கேக்கில் " முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதித்யா..." என்று எழுதப்பட்டு இருந்தது. பின்னர் மனிகுரங்கு குடும்பத்துக்கு ஆதித்யாவின் பிறந்த நாள் பரிசாக அதற்கு பிடித்தமான உலர் பழங்கள் நிறைந்த கேக் கொடுக்கப்பட்டது.
அந்த கேக்கை ஆதித்யா குட்டியுடன் சேர்ந்து மனித குரங்குகள் ருசித்து சாப்பிட்டன. இந்த வீடியோ காட்சியை வண்டலூர் பூங்கா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.