அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
செய்யாறில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்கி உள்ளது.
செய்யாறு
செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகா சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு, பள்ளி வளாகங்கள் மழைநீர் வடிய வழியின்றி தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.
பொதுமக்களுக்கு டெங்கு கொசு உற்பத்தி ஆகாத வகையில் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழைநீர் வடிய வழியின்றி தேங்கி கிடக்கிறது.
இந்த மைதானத்தை ஒட்டி நகராட்சியின் சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அப்பணியின் போது விளையாட்டு மைதானத்தில் இருந்து நீர் வடிய வழி ஏற்படுத்தாமல் முழுவதுமாக அடைத்து கட்டப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வடிய வழியின்றி தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.
நோய் தொற்று பரவாமல் இருக்க, மாணவர் நலன் கருதி தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.