மாவட்டத்தில் குடிநீர் திட்டப்பணிகள் தேக்கம்
குடிநீர் வடிகால் வாரியத்தில் நிர்வாக பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குடிநீர் திட்ட பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் வடிகால் வாரியத்தில் நிர்வாக பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குடிநீர் திட்ட பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் திட்டப்பணிகள்
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் சார்பில் தமிழகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி பணிகளை தவிர்த்து மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் வழங்கல் பணி மக்களின் அத்தியாவசிய பணி என்பதால் இந்த வாரியத்தின் நிர்வாக செயல்பாடுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதன்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய சிவகங்கை வட்டத்தில் கிராம குடிநீர் திட்ட கோட்டம், குடிநீர் திட்ட உருவாக்க கோட்டம் ஆகிய தலா 2 அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 4 அலுவலகங்களுக்கும் நிர்வாக பொறியாளர் நியமிக்கப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
மக்கள் அவதி
இந்தநிலையில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 4 நிர்வாக பொறியாளர் பணியிடங்களும் காலியாக நிரப்பப்படாமல் உள்ளது. கிராம குடிநீர் திட்டம், குடிநீர் திட்ட உருவாக்கம் என முக்கிய பணிகளுக்கு நிர்வாக பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளதால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குடிநீர் திட்ட பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடும் கோடை காலமாக உள்ள நிலையில் பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
குடிநீர் கேட்டு மாவட்ட நிர்வாகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். இதுபோன்ற இக்கட்டான நிலையில் நிர்வாக பொறியாளர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால் கிராம பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதிலும், புதிய குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து அதனை அரசுக்கு பரிந்துரை செய்து நிறைவேற்றுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, மேற்கண்ட வாரிய அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பண பட்டுவாடா, திட்ட பணிகளுக்கான நிதி ஒப்புதல் போன்றவற்றினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய குடிநீர் தேவையின் அவசியம் கருதி ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் கிராம குடிநீர்திட்ட கோட்டம், திட்ட உருவாக்க கோட்டம் ஆகிய 4 அலுவலகங்களுக்கும் நிர்வாக பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.