சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை
கண்காணிப்பு கேமரா இல்லாதால் சென்னை, திருச்சி, தர்மபுரியில் உள்ள 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் வரும் இளங்கலை மருத்துவ கல்வி வாரியம் (யு.ஜி.எம்.இ.பி.) அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது.
அந்த வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருச்சி கே.ஏ.பி.விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி ஆகியவையும், புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் அந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக இளங்கலை மருத்துவ கல்வி வாரியத்தின் இயக்குனர் ஷம்பு சரண்குமார் அந்தந்த கல்லூரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி இருக்கிறார்.
கண்காணிப்பு கேமரா
குறிப்பிட்ட விதிமுறைகளாக பயோமெட்ரிக் வருகை பதிவில் குறைபாடு, கண்காணிப்பு கேமராக்கள் திருப்திகரமாக இல்லாதது ஆகியவற்றை காரணமாக காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
அங்கீகாரத்தை திரும்ப பெறுவதால், தமிழ்நாட்டில் வரும் இந்த 3 கல்லூரிகளிலும், புதுச்சேரியில் ஒரு கல்லூரியிலும் நடப்பாண்டில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் 500 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களிலும் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான உரிமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
உறுதி செய்வோம்
இளங்கலை மருத்துவ கல்வி வாரியத்தின் இந்த சுற்றறிக்கை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. இதுபற்றி தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கல்லூரிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு சரியாக இருப்பதாகவும், மாணவர் சேர்க்கை நிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்' என்றும் தெரிவித்தனர்.