மாநில கூடுதல் மருத்துவ இயக்குனர் திடீர் ஆய்வு
செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாநில மருத்துவ கூடுதல் இயக்குனர் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்யாறு
செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாநில மருத்துவ கூடுதல் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது டெங்கு வார்டு, ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, தாய்சேய் நலப்பிரிவு, பிரசவ வார்டு, சமையலறை, ரத்தப் பரிசோதனை பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் பணியில் இருந்த டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வார்டுகளில் தூய்மை, கழிப்பறை சுகாதாரம், பாதுகாப்பான உணவு வழங்க வேண்டும்.
நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவுகளை இருக்கும் இடத்திற்கே சென்று வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அதன் பின்னர், திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பாபு, அரசு மாவட்ட தலைமை முதன்மை டாக்டர் பாண்டியன் மற்றும் டாக்டர்கள் மருத்துவ பணியாளர்கள் ஆகியோருடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தி, பருவகால நோய்களான டெங்கு குறித்தும், டெங்கு வார்டு பராமரிப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
ஆய்வின் போது டாக்டர்கள் வி.கார்த்திக், பாலாஜி புகழேந்தி, சந்திரன் உள்ளிட்ட அரசு டாக்டர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.