மாநில தூயக்காற்று செயல்திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மாநில தூயக்காற்று செயல்திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் ஐ.நா. சபையால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகரம் மற்றும் தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான திட்டங்கள் செயல்படுத்தப்படாதது வருத்தம் அளிக்கிறது.
இந்திய அரசின் தேசியத் தூய காற்றுத் திட்டம் 2019-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.200 கோடி ஒதுக்கப்படும் போதிலும் சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் மேற்கொள்ள வேண்டிய காற்று மாசு தடுப்புக்கான திட்டங்களை இன்னமும் மேற்கொள்ளவில்லை.
மேலும், இந்திய அரசின் தேசிய தூயக்காற்று திட்டத்தின் படி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மாநில தூயக்காற்று செயல்திட்டத்தை 2020-ம் ஆண்டில் உருவாக்கி, செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் 2022-ம் ஆண்டு ஆனபிறகும் கூட தமிழ்நாட்டுக்கான மாநில தூயக்காற்று செயல்திட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இத்திட்டத்தை அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு உடனடியாக உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.