"கூட்டணி பற்றி மாநில தலைவர்கள் முடிவு செய்ய முடியாது, தேசிய தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும்" - எச்.ராஜா பேச்சு


கூட்டணி பற்றி மாநில தலைவர்கள் முடிவு செய்ய முடியாது, தேசிய தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் - எச்.ராஜா பேச்சு
x

கூட்டணி பற்றி மாநில தலைவர்கள் முடிவு செய்ய முடியாது, தேசிய தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என்று எச்.ராஜா கூறினார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா தேசிய செயலாளரும், மூத்த நிர்வாகியுமான எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சமீபத்தில் அரங்கத்திற்குள் நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் தலைவர் அவ்வாறு பேசினார், இவ்வாறு பேசினார் என்று வதந்தி பரவி கொண்டிருக்கிறது. அதனை பொருட்படுத்த வேண்டாம். அவை முறையாக கூறப்பட்ட தகவல் அல்ல. அவர்கள் சொன்னதாக கசிந்த வார்த்தைகள். கூட்டணி தொடர்பாக நாங்கள் மையக்குழுவில் எங்களது கருத்துக்களை தெரிவிப்போம். எங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்களே முடிவு செய்து அறிவித்தாலும் அதனை செயல்படுத்துவது தான் எங்கள் கடமை.

கூட்டணி குறித்து உறுதியான முடிவுகள் அறிவிக்கும் வரை பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் பொது வெளியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். சமீபத்தில் நான் டெல்லிக்கு செல்ல கோவை விமான நிலையத்தில் காத்திருந்தபோது அங்கு எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோரை பார்த்து பேசினேன்.

எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஒரு முடிவை மாற்ற வேண்டும் என்றால் அது மத்தியில் இருக்கும் பா.ஜனதாதான் முடிவு செய்யும். இது மாநிலத்தில் உள்ள தலைவர்களோ, நிர்வாகிகள் குழுவோ முடிவு செய்ய முடியாது. எங்கள் கருத்துக்களை மத்திய குழுவிடம் சொல்லலாம்.

தி.மு.க. உடைந்த பானை. இனி ஒட்டாது. தி.மு.க. தமிழகத்தில் ஒரு கட்சியாக இருக்காது. பல்வேறு கட்டங்களில் விரிசல் ஏற்படும். தி.மு.க.வின் டி.என்.ஏ. மாறிவிட்டது. கருணாநிதிக்கு பிறகு தலைவர் சொல்வதற்கு கட்டுப்படும் நிலை இல்லை. இதனை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story