மாநில அளவிலான கைப்பந்து போட்டி
சீர்காழியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான 3 நாள் கைப்பந்து போட்டி தொடக்க விழா நடந்தது.போட்டிக்கு எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வீரர்கள்
தமிழகத்தில் ஆக்கி விளையாட்டு தளம் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளது. ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்திய அணி கடந்த 8 முறை பதக்கம் பெற்றுள்ளது. வருகிற 2024 -ம் ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள போட்டியில் இந்திய ஆக்கி அணியில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திக், மாரீஸ்வரன் ஆகிய 2 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.விளையாட்டு துறையில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதனை இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், ஒன்றியக் குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், பள்ளி செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன் உள்பட பலா் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் நன்றி கூறினார்.இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைப்பந்து அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.