மாநில அளவிலான கைப்பந்து போட்டி: திருச்சி ஜமால்முகமது கல்லூரி அணி அரையிறுதிக்கு தகுதி


மாநில அளவிலான கைப்பந்து போட்டி: திருச்சி ஜமால்முகமது கல்லூரி அணி அரையிறுதிக்கு தகுதி
x

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் திருச்சி ஜமால்முகமது கல்லூரி அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

திருச்சி

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், 12-வது மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான ஐ.ஓ.பி. சுழற்கோப்பைக்கான கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடக்கிறது. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடக்கின்றன. இதில் மாநிலம் முழுவதிலும் 8 முன்னணி கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் போட்டிகளில் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி, கோவை காருண்யா பல்கலைக்கழகத்தை 25-22, 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. திருச்சி ஜமால் முகமது கல்லூரி 'ஏ', திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியை 25-23, 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி 'பி' அணியை 25-17, 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது. கிருஷ்ணன் கோவில் கலசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை காருண்யா பல்கலைக்கழகத்தை 23-25, 25-23, 25-17 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

மேலும் மற்ற ஆட்டங்களில் திருப்பத்தூர் தூய இருதய கல்லூரி, கோவை ரத்தினம் கல்லூரியையும், திருப்பத்தூர் தூய இருதய கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி 'பி' அணியையும், ஜமால்முகமது கல்லூரி 'ஏ' அணி, கலசிலிங்கம் பல்கலைக்கழக அணியையும், பிஷப்ஹீபர் கல்லூரி, கோவை ரத்தினம் கல்லூரியையும், செயிண்ட் ஜோசப் கல்லூரி, கலசிலிங்கம் பல்கலைக்கழகத்தையும், ஜமால் முகமது கல்லூரி 'பி' அணி, ரத்தினம் கல்லூரி அணியையும் தோற்கடித்தன. லீக் ஆட்டங்களின் முடிவில் ஜமால் முகமது கல்லூரி 'ஏ' அணி, பிஷப் ஹீபர் கல்லூரி, செயிண்ட் ஜோசப் கல்லூரி, திருப்பத்தூர் தூய இருதய கல்லூரி ஆகிய 4 அணிகள் அரை இறுதி போட்டிக்கு முன்னேறின. இன்று (திங்கட்கிழமை) அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடக்கின்றன.


Next Story