மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட்: பியர்லஸ் பைட்டர்ஸ் அணி சாம்பியன்
மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட் போட்டியில் பியர்லஸ் பைட்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
பெண்கள் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் திருச்சியில் மாநில அளவிலான எல்.எஸ்.எப். பெண்கள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து சிறந்த 8 அணிகள் கலந்து கொண்டன. பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பியர்லஸ் பைட்டர்ஸ் அணியும், எஸ்.டி.ஜி. அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த எஸ்.டி.ஜி. அணி 28 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பியர்லஸ் பைட்டர்ஸ் அணி 24.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் திருச்சி-தஞ்சை மறைமாவட்ட பேராயர் சந்திரசேகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார். இதில் போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ், லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.