அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

பெரம்பலூர் பணிமனை முன்பு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்ஷனர் நலச்சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும், மத்திய சங்க தலைவருமான மருதமுத்து தலைமை தாங்கினார். சங்கத்தின் பெரம்பலூர் கிளை தலைவர் கந்தசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 7 ஆண்டு காலமாக அகவிலைப்படி உயர்த்தப்படாததை கண்டித்தும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஓய்வூதியர்களை புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், 3 ஆண்டு கால ஊதிய ஒப்பந்த காலத்தை 4 ஆண்டு காலமாக மாற்றியதை கண்டித்தும், 15 ஆண்டு காலமாக கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்காததை கண்டித்தும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மருத்துவ திட்டம் இல்லாததை கண்டித்தும், 2020-ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன் வழங்கப்படாததை கண்டித்தும், 1.4.2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படாததை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 1½ ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாததை தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதேபோல் நேற்று அதிகாலை மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பிலும் பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story