பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம்
கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 12-ந் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாநில கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலக்குழு கூட்டம்
கரூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் துணைத்தலைவர் பொன். கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
உள்ளாட்சித் துறையில் அவுட் சோர்சிங் முறையை கைவிட்டு அரசாணை 152, 159-ஐ ரத்து செய்ய வேண்டும், 50 வயதுக்கு மேல் பணிபுரிபவர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 12-ந்தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்துவது.
ஆர்ப்பாட்டம்
கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டை வருகிற செப்டம்பர் மாதம் 23 மற்றும் 24-ந்தேதிகளில் நெல்லை பாளையங்கோட்டையில் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கணேசன், சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ரெங்கராஜ், ஒருங்கிணைப்பு குழு மாநிலத்தலைவர் சந்தானம், மாநில செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.