கடலூர் சில்வர் பீச்சில் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு


கடலூர் சில்வர் பீச்சில் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு
x

நவராத்திரி விழா நிறைவுபெற்றதையொட்டி விஷ்ணு சமாஜ் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடலூர் சில்வர் பீச்சில் துர்க்கை அம்மன் சிலையை கரைத்து, உற்சாகமாக கொண்டாடினர்.

கடலூர்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு சமாஜ் சமூகத்தினர் கடலூரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவை (துர்க்கா பூஜை) சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழாவை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையத்தில் உள்ள மண்டபத்தில் தொடங்கினர்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு வேளை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். தினந்தோறும் பஜனை பாடல்களை பாடியும், தாண்டியா நடனம் ஆடியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். நவராத்திரி நிறைவு நாளான நேற்றும் துர்க்கை அம்மன், விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட துர்க்கை அம்மன் சிலையை வாகனம் மூலம் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

கடலில் கரைத்தனர்

தொடந்து கடற்கரையில் துர்க்கை அம்மனுக்கு தீர்த்தவாரி நடத்தினர். அப்போது விஷ்ணு சமூகத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் பல வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாடல்களை பாடியும், நடனம் ஆடியும் உற்சாகம் அடைந்தனர். இதையடுத்து துர்க்கை அம்மன் சிலையை ஒரு படகில் வைத்து வழி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு சிலையை கடலுக்குள் கொண்டு சென்று கரைத்து விட்டு சென்றனர்.


Next Story