லாரிகளை திருடி கூழாங்கற்கள் கடத்தல்; 3 பேர் கைது
உளுந்தூர்பேட்டையில் லாரிகளை திருடிச் சென்று கூழாங்கற்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை பகுதியில் புவியியல் துறை அதிகாரிகள், கூழாங்கற்களை கடத்தும் லாரிகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து வருகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கூழாங்கற்கள் கடத்திச் சென்ற 4 லாரிகளை விழுப்புரத்தில் புவியியல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர்கள், தங்கள் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு, தங்களை போல் கூழாங்கற்கள் கடத்தி விற்பனை செய்யும் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் தான் காரணம் என்று கருதியதாக தொிகிறது.
இதனால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதீசுக்கு சொந்தமான 3 லாரிகளை பள்ளமேடு பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல், வீரமணி உள்ளிட்டோர் கடத்தி சென்றனர். இதுபற்றி அறிந்த சதீஷ், உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், கடத்தப்பட்ட லாரியை தேடி வந்தனர். அப்போது திட்டு பகுதியில் 3 லாரிகளிலும், கூழாங்கற்கள் அள்ளி கடத்திக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த போலீசார், லாரிகளை திருடி கூழாங்கற்கள் கடத்திய குழந்தைவேல், வீரமணி, ராஜசேகர், அணில்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சத்தியராஜ், ஆறுமுகம், ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்தனர்.