விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத் தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்


விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத் தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

பதிவு செய்து நிதிப்பயன் பெறாமல் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை

பதிவு செய்து நிதிப்பயன் பெறாமல் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தினர்.

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:-

பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தில் நிதிப்பயன் பெறுதலில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிதிப்பயன் பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து நிதிப்பயன் பெறாமல் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத் தொகை பெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவு யூரியா இருப்பு வைக்க வேண்டும்.

தனியார் உரக்கடைகளில் இணைப்பொருட்கள் வழங்குவதை தடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பு நிலுவைத்தொகை பெற்றுத்தர ேவண்டும்.

ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த முகாம் நடத்த வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறையின் மூலம் ஏரி குளங்கள் மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்.

குறைதீர்வு மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் துறை தலைவர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும். அரசு பால் கொள்முதல் மையங்களில் மின்னணு எடைமேடை மூலம் பால் எடை போட வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அரசு அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். மேலும் தனிநபர் தொடர்பான மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.

கையேடு

கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக உழவர் நலத்திட்டங்கள் அடங்கிய கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப்சிங், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய அரசு திட்டம்) ஏழுமலை, மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்புத் துறை) சோமசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராம்பிரபு, பல்வேறு துறை தலைவர்கள், அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story