புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்


புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்
x

அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறைத் தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை,

இன்று (07.03.2024) சென்னை தலைமைச் செயலகத்தில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறைத் தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் அர. சக்கரபாணி முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்களின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களையும் கடைக்கு வந்து தான் கைவிரல் ரேகைப் பதிவு செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்துப் பொருள்களும் கடைகளில் இருப்பதை உறுதி செய்வதோடு, ஒரே நேரத்தில் அனைத்துப் பொருள்களும் அட்டைதாரர்களுக்கு கிடைக்கும் வகையில் ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்றும், நெல் கொள்முதலில் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமின்றி செயல்பட்டுக் கொள்முதல் செய்யும் நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், ராகி கொள்முதல் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகமாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அனைத்துப் பொருள்களும் தரமாக இருப்பதைத் தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என்றும், அமுதம் அங்காடிகள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்றும், அனைத்துக் கிடங்குகளையும் தூய்மையாகவும் சுற்றுப்புறத்தை அழகாகவும் பராமரிக்க வேண்டும் என்றும், அரிசிக் கடத்தல் வழித்தடங்களையும் வழிமுறைகளையும் கண்டறிந்து அறவே நிறுத்திட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

பொதுமக்களுக்குப் பணியாற்றுவதில் கண்ணுங்கருத்துமாக இருந்து எவ்விதப் புகாருக்கும் இடமின்றிக் கள அலுவலர்கள் செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தைப் பொறுத்தவரை, கொள்ளளவுப் பயன்பாட்டை அதிகரித்து வருவாய் ஈட்டி, தேவைப்படும் இடங்களில் புதிய கிடங்குகள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகளை வாடகைக்கு எடுக்கவும் புதிதாகக் கட்டவும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், அனைத்துக் கட்டுமானப் பணிகளையும் காலக்கெடு நிர்ணயித்து விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அனைத்து அலுவலர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும் என்றும் திறம்படச் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Next Story