சென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் மக்களுக்கான திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


சென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் மக்களுக்கான திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

சென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் மக்களுக்கான திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தயாநிதிமாறன் எம்.பி. உத்தரவிட்டுள்ளார்.

சென்னை

சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் குழு தலைவர் தயாநிதி மாறன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட சமூக நல அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு துறை, உணவுப் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சீர்மிகு நகர திட்டம், பள்ளிகள் மேம்படுத்தும் பணிகள், அம்ரித் திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரும் பணிகள் என சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெற உள்ள 10 முக்கியமான திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், சென்னையை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் வைத்த கருத்துகள் வருமாறு:-

கணபதி (மதுரவாயல்) :- மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் அடிக்கடி கழிவுநீர் குடிநீருடன் கலந்து வருவதால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

ஜெ.கருணாநிதி (தியாகராயநகர்) :- தனியார் பள்ளிகளில் உள்ள கழிவறைகளை அவ்வப்போது மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து தூய்மையாக வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கர் (திருவொற்றியூர்) :- திருவொற்றியூர் தொகுதியில் ரேஷன் கடைகள், நீதிமன்றம் போன்றவை தனியார் இடங்களில் செயல்பட்டு வருவதால் அரசாங்கத்திற்கு தேவையற்ற செலவுகள் ஏற்படுகிறது. எனவே, சொந்தக் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

தொடர்ந்து, சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் தயாநிதி மாறன் எம்.பி. பேசியதாவது:-

இந்த கூட்டம் மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது. ஆனால், சட்டமன்றம், மாமன்றத்தில் பேசவேண்டிய பிரச்சினைகளை பேசியிருக்கிறீர்கள். பரவாயில்லை. இவை அனைத்தும் மக்கள் பிரச்சினை. எனவே, விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் அதிகாரிகள் தீர்வு காண வேண்டும். மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களை விரைவாக முடித்து, திட்டத்தின் பலனை மக்களுக்கு விரைந்து சென்றடையும் வகையில் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் துணை தலைவர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., வடசென்னை தொகுதி எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே, எம்.எல்.ஏ.க்கள், குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story