பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனி நடைபாதை அமைக்க நடவடிக்கை-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
"நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
ஆய்வு கூட்டம்
நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணிகள்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கையேட்டினை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். இதை அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மனோ தங்கராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சாலை பராமரிப்பு
இதைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 99 கிலோ மீட்டர், மாநில நெடுஞ்சாலைகள் 450 கிலோமீட்டர், மாவட்ட முக்கிய சாலைகள் 204 கிலோமீட்டர், இதரச்சாலைகள் 1022 கிலோமீட்டர் என மொத்தம் 1,775 கிலோ மீட்டர் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
2021-2022-ம் நிதி ஆண்டில் 165 கிலோமீட்டர் நீளமுள்ள 102 சாலை பணிகள் ரூ.124 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு 83 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 2022-2023-ம் நிதி ஆண்டில் 77 கிலோமீட்டர் நீளமுள்ள 38 சாலை பணிகள் ரூ.137 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு 10 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 15 ஊராட்சி ஒன்றிய சாலைகள் இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தும் பணிக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ரூ.7 கோடி மதிப்பீட்டில் 19 பாலப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.இதில் 15 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நபார்டு கிராமசாலை அழகுகள் மூலம் ரூ.18 கோடி மதிப்பீட்டில் 5 பாலப்பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
குலவணிகர்புரம் ரெயில்வே பாலம்
பாளையங்கோட்டை மகாராஜாநகர் ெரயில்வே மேம்பால பணி 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. காவல்கிணறு அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நில எடுப்பு பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தாழையூத்தில் இருந்து 33 கிலோமீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க நிலஎடுப்பு பணிகள் நடந்து வருகிறது. நெல்லை-அம்பை சாலை பணிகள் ஆகஸ்டு மாதத்திற்குள் நிறைவு பெறும்.
தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்க சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மாநில நெடுஞ்சாலையில் 14 இடங்களில் சுங்க சாவடி அமைத்து வசூல் செய்துவருகின்றனர். இதனை அகற்ற மத்திய அரசிடம் பல முறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கொள்கை முடிவு என காலம் கடத்தி வருகின்றனர்.
புதிய செயலி
மாநில நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை தடுக்க ஜூன் மாதம் புதிய செயலியை தொடங்க இருக்கிறோம். இந்த செயலியில் பொதுமக்கள் நேரடியாக புகார் அளித்தால் அதன் மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் பழுதடைந்த சாலைகள் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பொன் விழா கொண்டாடப்படும் நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அண்ணா சாலை போல் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைகள் தரமானதாக அமைக்கப்பட்டு வருகிறது. எனது வாகனத்திலேயே சோதனை செய்யும் கருவியுடன் தான் சுற்றுபயணம் மேற்கொள்கிறேன். திடீர் திடிரென ஆய்வு செய்து வருகிறேன்.
பாதயாத்திரை பக்தர்கள்
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள் வசதிக்காக தனிபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்து முதல்-அமைச்சரின் அனுமதியோடு அடுத்த ஆண்டில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். கருணாநிதி பிறந்த நாளையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். சாலைகளில் அதிக அளவில் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமை ்செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், நெடுஞ்சாலைதுறை தலைமை பொறியாளர்கள் சந்திரசேகர், முருகேசன், கண்காணிப்பு பொறியாளர்கள் ஜெயராணி, சாந்தி, முருகேசன், ஜவகர், முத்துராஜ், கோட்ட பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், ஆணையப்பன், லிங்குசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, வக்கீல் செல்வ சூடாமணி, வடக்கு விஜயநாராயணம் கூட்டுறவு சங்க தலைவர் இ.நடராஜன், தொழில் அதிபர் இ.என்.மனோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.