வேலூர் மாவட்டத்தின் பசுமை பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் அதிகளவு நட்டு பசுமை பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட வன அலுவலர் கலாநிதி கூறினார்.
இயற்கை வளங்கள் பாதுகாப்பு
சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி கலந்து கொண்டார். இதுதொடர்பாக அவர் தினத்தந்திக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் நடந்த வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும், வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். முதல்-அமைச்சரின் ஆலோசனையின் பேரில் வேலூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்டம் முழுவதும் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
18 லட்சம் மரக்கன்றுகள்
வேலூர் மாவட்டத்தில் 2,37,120 ஏக்கர் (96 ஆயிரம் ஹெக்டேர்) காடுகளை உள்ளடக்கிய வனப்பகுதி உள்ளது. இங்கு மான்கள், காட்டுமாடுகள், யானை, சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. வனவிலங்குகளை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. வேலூர் மாவட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடுவது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வனச்சரகர் மேற்பார்வையில் வனவர்கள், வனப்பாதுகாவலர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு பசுமை இயக்கத்தின்படி ஒரு மாவட்டத்தின் பரப்பளவில் 33 சதவீதம் காடுகள் அல்லது பசுமை பரப்பு இருக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் பசுமை இயக்கம் கடந்தாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் 18 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
பசுமை மின்உற்பத்தி
இதற்காக வனத்துறை சார்பில் சுமார் 14 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. 18 லட்சம் மரக்கன்றுகளும் விரைவில் நட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கோடை காலத்தில் வேலூர் மாவட்டத்தில் சூரிய வெப்பத்தை குறைக்க முடியும். அதேபோன்று காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பையும் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் தடுக்கலாம். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மலைகள், வனப்பகுதிகளை உள்ளடக்கிய பசுமை பரப்பு 25 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. எனவே அதிகளவு மரக்கன்றுகள் நட்டு பசுமை பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதைத்தவிர தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் மூலம் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை குறைத்தல், நிலக்கரி, மின்சாரம் பயன்பாடு மற்றும் பேப்பர் பயன்படுத்துவதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு மற்றும் புதிதாக கட்டிடம் கட்டும்போது பசுமை மின்உற்பத்தி அமைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நீர்நிலைகளை பாதுகாக்க...
அதேபோன்று தமிழ்நாடு ஈரநில இயக்கம் மூலம் இயற்கையான நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகளுக்கு நீர்வரத்து வரும் கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்று கண்டறிந்து அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் கோடைகாலங்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்கவும், அதனை ஏற்படுத்தும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வனப்பாதுகாவலர்கள் அடங்கிய குழுவினர் மலைப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். காடுகள், மரங்கள் அதிகளவு இருந்தால் தான் அதிகளவு மழைப்பொழிந்து பொதுமக்களுக்கு குடிக்க குடிநீர், விவசாயம் செய்வதற்கு தேவையான தண்ணீர் மற்றும் சுத்தமான காற்று கிடைக்கும். எனவே பொதுமக்கள் மரக்கன்றுகள் அதிகளவு நட்டு இயற்கையை பாதுகாக்க வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.