கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க நடவடிக்கை

கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க நடவடிக்கை
பொள்ளாச்சி
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை, அரிசி கடத்தும் கும்பல் பொதுமக்களிடம் காசு கொடுத்து வாங்கி அதனை கூடுதல் விலைக்கு அருகில் உள்ள கேரளா மாநிலத்திற்கு கடத்தி வந்தது. இதனை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தும் நபர்களை தமிழக- கேரளா எல்லை பகுதியில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதியில் மாறுவேடத்திலும் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவுபடி ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் போலீசாரை எளிதாக தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950 வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தொலைபேசி எண் பொதுமக்களை எளிதில் சென்று அடையும் வகையில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் சார்பில் பொள்ளாச்சி பஸ் நிலையம், ெரயில் நிலையம், மாநில எல்லை சோதனைச் சாவடிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உதவிட வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






