10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவு
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
ஆய்வுக்கூட்டம்
குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஒன்றியங்களை சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.
இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், பள்ளி மாணவர்கள் விவசாயம் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் மாணவர்களுக்கான வேளாண் சுற்றுலா அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.
தேர்ச்சி சதவீதம்
மாணவர்களின் வருகையை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் இடைநின்றல் இல்லாமல் பள்ளிக்கு வருவதையும், மாணவர்கள் பாடத்திட்டத்தை புரிந்து படிப்பதையும் ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் விளையாட்டு உள்ளிட்ட ஆரோக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும்.
மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி, மாநில அளவில் முதலிடத்தை நோக்கி மாவட்டத்தை கொண்டு செல்ல தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பாடங்களில் அடிப்படை திறன் குறைந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தனி பயிற்சி அளித்திட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மதுபாலன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 66 பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 40 முதுகலை ஆசிரியர்கள், 52 பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.