வெளிநாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் - கனிமொழி எம்.பி.


வெளிநாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் - கனிமொழி எம்.பி.
x

வெளிநாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி எம்.பி கூறினார்.

ஶ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் முதல் கட்டமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர சங்க கால வாழ்விடப்பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் வந்து பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறியதாவது,

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன நெற்றிப் பட்டம் மற்றும் காதணி கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமான கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடைபெற்றால் உலக அளவில் ஆதிச்சநல்லூர் புகழ் போற்றப்படும். மேலும், இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 145 வருடங்களுக்கு முன்பு ஜெர்மன், பெர்லின் நகர் உள்பட வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆதிச்சநல்லூர் பொருட்களை கண்டுபிடித்து அதை கொண்டு வந்து ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும்.

இதற்கான நடவடிக்கையை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் அதற்கான கடிதம் அளிப்பேன். தொடர்ந்து அந்த பொருள்களை மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story