6 மாதங்களில் 439 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை


6 மாதங்களில் 439 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை
x

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 6 மாதத்தில் 439 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தினமும் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள நாய்களை பிடிக்க பிரத்யேக வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 6 மாதத்தில் 439 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தினமும் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள நாய்களை பிடிக்க பிரத்யேக வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்தடை சிகிச்சை

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் தெருக்கள், பூங்கா, மார்க்கெட், சாலைகள் போன்ற இடங்களில் சுற்றிதிரியும் தெருநாய்களை கணக்கெடுத்து அவற்றிற்கு கருத்தடை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி உரிய நெறிமுறைகளின்படி பிடித்து மாதாக்கோட்டையிலுள்ள மிருகவதை தடுப்பு சங்கத்தின் கீழ் செயல்படும் நாய்களுக்கு கருத்தடை செய்யும் மையத்திற்கு அனுப்பப்படுகிறது.

இதற்காக தஞ்சை மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட பிரத்யேகமான வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு நெறிமுறைகளின்படி தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து பராமரிக்கப்பட்டு பின்பு நாய்களை பிடிக்கப்பட்ட அதே இடத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டு வருகிறது.

439 தெருநாய்கள்

கடந்த பிப்ரவரி மாதம் முதல் தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வாரம்தோறும் புதன்கிழமை மட்டுமே மேற்கொள்ளப்பட்ட இந்த பணியானது தற்போது தினமும் நாய்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் படி இதுவரை 439 தெருநாய்களை பிடித்து கருத்தடை மையத்திற்கு அனுப்பப்பட்டு தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பின்னர் அந்த நாய்கள் மீண்டும் அதே இடத்தில் விடப்பட்டுள்ளது.

நேற்று தஞ்சை அருளானந்த நகர், ராமகிருஷ்ணா நகர், ரோகிணி மருத்துவமனை சாலை, யாகப்பா நகர் மற்றும் வி.என்.எஸ் கார்டன் பகுதியில் 10 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பகுதியில் நாய்கள் பிடிக்கப்படும் பணியானது நடைபெறும். இதேபோல தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் தெருவில் சுற்றிதிரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story