ஸ்டெர்லைட் வழக்கு: 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு சுப்ரீம் கோர்ட்டில் உரிய நீதி கிடைத்திருக்கிறது - வைகோ


ஸ்டெர்லைட் வழக்கு: 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு சுப்ரீம் கோர்ட்டில் உரிய நீதி கிடைத்திருக்கிறது - வைகோ
x

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994-ம் ஆண்டு ஜனவரி 1-ல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996-ம் ஆண்டில் இருந்து மறுமலர்ச்சி தி.மு.க. மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது.

இறுதியாக சுப்ரீம் கோர்ட்டில் நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 7-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் எனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தேன். 2019 பிப்ரவரி 18 அன்று சுப்ரீம் கோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தபோது, சென்னை ஐகோர்ட்டு செல்லுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18-ம் தேதி மாண்பமை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு நாசக்கார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (29.02.2024) ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை சென்னை ஐகோர்ட்டு சிறப்பாகக் கையாண்டதாக பாராட்டுத் தெரிவித்து இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன் மூலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகி விட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இது மறுமலர்ச்சி தி.மு.க. ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி ஆகும். ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு சுப்ரீம் கோர்ட்டில் உரிய நீதி கிடைத்திருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story