தூத்துக்குடியில் சுகாதாரமாற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான மக்காச்சோளம் பறிமுதல்


தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 9:27 AM GMT)

தூத்துக்குடியில் சுகாதாரமாற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்ட ரூ.20 கோடி மக்காச்சோளம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சுகாதாரமற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 15 ஆயிரம் டன் மக்காச்சோளத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தனியார் குடோனுக்கு சீல் வைத்தனர்.

சுகாதாரமற்ற மக்காச்சோளம்

தூத்துக்குடி- மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் குடோனில் மக்காச்சோளம் சுகாதரமாற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்டதால், வண்டுகள், பூச்சிகள் பரவி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார்கள் வந்தன.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று அந்த குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த குடோனில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 15 ஆயிரம் டன் மக்காச்சோளத்தை ஏற்றுமதிக்காக இருப்பு வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த குடோனில் இருந்த பெரும்பாலான மக்காச்சோள மூட்டைகளில் வண்டு மற்றும் இதர பூச்சித்தொற்று இருப்பதும், குடோன் மிகவும் சுகாதார குறைபாட்டுடன் இருப்பதும் கண்டறியப்பட்டது.

தனியார் குடோனுக்கு 'சீல்' வைப்பு

எனவே, தனியார் குடோனில் 15 ஆயிரம் டன் மக்காச்சோளமும் பறிமுதல் செய்யப்பட்டு, வணிகரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மக்காச்சோளத்தின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், பொதுமக்களின் பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு அந்த குடோனுக்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனர். மேலும், தொடர் விசாரணைக்காகவும், உணவுமாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்ய ஏதுவாகவும், சாட்சியங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட உணவுப்பொருளின் பாதுகாப்புக்காகவும், மக்காச்சோளம் இருப்பு வைக்கப்பட்டிருந்த குடோனை அதிகாரிகள் மூடி 'சீல்' வைத்தனர்.

அதிகாரிகள் எச்சரிக்கை

பறிமுதல் செய்யப்பட்ட மக்காச்சோளத்தில் இருந்து உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்து, தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன. உணவு பாதுகாப்பு உரிமம் மட்டுமின்றி, உணவு வணிக வளாகத்தை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், இதுபோன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இதேபோன்று தூத்துக்குடியில் பல டீக்கடைகளில் வடை போன்ற தின்பண்டங்கள் சுகாதாரமின்றி வைக்கப்பட்டு உள்ளன. அதுபோன்ற கடைகளில் சுகாதாரமான முறையில் உணவுப்பொருட்களை வைப்பதற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story