திருட்டு போன கார் மீட்பு
திருட்டு போன கார் மீட்கப்பட்டது
திருப்புவனம்
மதுரை மாவட்டம் ஆனையூர் அருகே உள்ள கலைநகர் பகுதியை சேர்ந்தவர் கவுசிக். இவரது மனைவி ராஜேஸ்வரி. சம்பவத்தன்று இரவு கணவன், மனைவி இருவரும் தங்கள் புதிய காரில் கீழடி விலக்கு அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் அவர்களை மிரட்டி ராஜேஸ்வரி கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்தனர். மேலும் கவுசிக்கை மிரட்டி செல்போன், கார் சாவியை வாங்கினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஒருவரும் மற்ற இருவரும் புதிய காரை எடுத்து கொண்டு தப்பினார்கள். இது குறித்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இதற்கிடையில் மர்ம நபர்கள் பறித்து சென்ற கார் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஒரு கருவேல காட்டிற்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.