கற்களை வீசி பிளஸ்-2 மாணவர்கள் மோதல்


கற்களை வீசி பிளஸ்-2 மாணவர்கள் மோதல்
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2 Feb 2023 6:46 PM GMT)

பண்ருட்டி அருகே கற்களை வீசி பிளஸ்-2 மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதனால் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர்

புதுப்பேட்டை,

மாணவர்கள் மோதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள், சாதி ரீதியாக இருபிரிவினராக பிரிந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-2 மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கைகளாலும், கற்களை வீசியும் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினர்.

ஆசிரியர்களே காரணம்

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், பிளஸ்-2 மாணவர்கள் இருபிரிவினராக பிரிந்து மோதிக்கொள்வதற்கு அங்கு பணிபுரியும் ஆசிரியர்களே காரணம். அவர்கள் தான் சாதி ரீதியாக மாணவர்களை தூண்டிவிட்டு இது போன்ற சம்பவத்தில் ஈடுபட வைக்கிறார்கள். மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற செயலில் ஈடுபடுவது வேதனையடைய செய்கிறது. எனவே மோதல் சம்பவம் தொடர்பாக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடம் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதனிடையே பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த மோதல் சம்பவத்தால் புதுப்பேட்டையில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பள்ளிக்கூடத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story