முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் உச்சகட்ட நீர்மட்டம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் நீர் வரத்து குறைந்து நீர் மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கள்ளக்காதல் தொடர்பாக கம்பம் பகுதியை சேர்ந்த ஒருவரை கொலை செய்து அவரது உடலை சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் வீசினர். இதுதொடர்பாக கம்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடலை போலீசார் தேடி வருகின்றனர். 10 நாட்களுக்கும் மேலாக அவரது உடல் கிடைக்காததால் ஆற்றில் தண்ணீரை நிறுத்தி, அவரது உடலை தேட போலீசார் திட்டமிட்டனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி நேற்று காலை 6 மணி முதல் முல்லைப்பெரியாற்றில் இருந்து தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. முல்லைப்பெரியாற்றில் போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.