30 வழித்தடங்களில் அரசு பஸ்கள் நிறுத்தம்- வியாபாரிகள், பொதுமக்கள் அவதி


30 வழித்தடங்களில் அரசு பஸ்கள் நிறுத்தம்- வியாபாரிகள், பொதுமக்கள் அவதி
x

ஆரணி வழியாக 30-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி வழியாக 30-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

போக்குவரத்துக்கழக பணிமனை

திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஆரணியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையானது வருவாய் அதிகம் ஈட்டக்கூடிய பணிமனையாக விளங்குகிறது. இங்கிருந்து 86-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இவற்றில் பழுதடைந்த பஸ்களுக்கு மாற்று பஸ்களும் இயக்கப்பட்டன.

தற்போது 70 பஸ்களே பணிமனையில் உள்ளன. இவற்றில் டவுன் பஸ்களும் ஓரங்கட்டப்பட்டதால் கிராமப்புறங்களுக்கு 'ரூட்' பஸ்களைத்தான் இயக்க முடிகிறது.

இதனால் கிராமப்புற பெண்கள் இலவச கட்டண சலுகை பெற முடியாமல் பணத்தை செலவழித்துத்தான் பஸ்சில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலைதான் மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்ளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமாவாசை தினத்தன்று மேல்மலையனூருக்கும், பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலைக்கும், விடுமுறை நாட்களுக்கு முன்னதாகவும், விடுமுறை முடியும் இறுதி நாளும் சென்னைக்கும் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது.

இந்த சிறப்பு பஸ்களால் ஆரணி போக்குவரத்துக்கழகத்துக்கு அதிக வருவாய் கிடைப்பதால் சிறந்த பணிமனை என்ற சாதனையும் கிடைத்துள்ளது.

30 வழித்தடங்களில் நிறுத்தம்

இந்த நிலையில் ஆரணியில் இருந்து ஈரோட்டிற்கும், ஆரணியில் இருந்து திருவள்ளூர், சென்னை அடையார், சென்னை தி- நகர், வேலூரிலிருந்து ஆரணி வழியாக மேல்மலையனூர், ஆற்காட்டிலிருந்து ஆரணி வழியாக மேல்மலையனூர், வேலூரிலிருந்து ஆரணி வழியாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திருப்பத்தூர், ஆரணியில் இருந்து திருவண்ணாமலை வழியாக கோவை, செய்யாறிலிருந்து ஆரணி வழியாக ஒகேனக்கல், சிதம்பரம், ஆரணியிலிருந்து வேலூர் வழியாக திருப்பதி, ஆரணி, காஞ்சீபுரம், சென்னை, நெய்வேலி, குடியாத்தம், போளூர், ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட 30 வழித்தடங்களில் சென்ற அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

இவ்வழியாக செல்லக்கூடிய பயணிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வேறு பஸ்களில் ஏறி கூடுதல் கட்டணம் கொடுத்தும் உரிய நேரத்தில் சென்று சேர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

வியாபாரிகளும், வணிகர்களும் குறித்த நேரத்துக்கு இந்த ஊர்களுக்கு சென்று சேர்ந்த வணிக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

மீண்டும் இயக்க வேண்டும்

எனவே நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பஸ்களை மீண்டும் இயக்கி பணிமனைக்கு மேலும் வருவாய் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் கிராமங்களை சேர்ந்த பெண்கள், மாணவர்கள் அரசின் கட்டண சலுகைகளை பெற்று பயனடைய மீண்டும் டவுன் பஸ்களை அரசு, இந்த போக்குவரத்துக்கழகத்துக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story