புயல், மழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!
சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
சென்னை,
`மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நகர தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. நேற்று முழுவதும் பெய்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது. மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்த நிலையில், புயல், மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். முதலில் சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதன்பின் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார். அதனைதொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சுண்ணாம்பு கொளத்தூர் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சீரமைப்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.