எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் கைது
குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் அமைதி திரும்பியதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
கோவை
குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் அமைதி திரும்பியதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
பெட்ரோல் குண்டுவீச்சு
கோவையை அடுத்த குனியமுத்தூரில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர்.
இது குறித்து கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் ரகுவின் கார் மீது கடந்த 23-ந் தேதி மர்ம எரிபொருளை வீசியதில் தீப்பற்றி எரிந்தது. அன்று இரவு 11 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த பரத் என்பவர் வீட்டில் மண்எண்யெயை பாட்டிலில் தீயை பற்ற வைத்து எறிந்தனர்.
இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வெடிபொருள் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்தனர். மேலும் நுண்ணறிவு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
இதில் தொடர்புடைய அறிவொளிநகரை சேர்ந்த ஜேசுராஜன் (வயது34), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த இலியாஸ் (34) என்பதும், அவர்கள் 2 பேரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் பொறுப்பு வகிக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஒப்பணக்காரவீதி, பாரதீய ஜனதா அலுவலகம் உள்ளிட்ட மேலும் 4 இடங்களில் நடைபெற்ற சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள் குறித்தும் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. இதில் 2 சம்பவங்களில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். பஸ்கள் மீது கல்வீசியவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமைதி திரும்புகிறது
கோவையில் தற்போது அமைதி திரும்பி வருகிறது. பல்வேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்களும் அமைதிக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறி உள்ளனர். நகரில் பதற்றம் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார். அப்போது துணை கமிஷனர் சிலம்பரசன் உடன் இருந்தார்.
கைதான ஜேசுராஜன் 87-வது வார்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவராகவும், இலியாஸ் அந்த கட்சியின் உறுப்பினராகவும் உள்ளனர்.