கொரட்டூரில் பொதுமக்கள் பங்கேற்ற 'வீதி திருவிழா' கோலாகலம்


கொரட்டூரில் பொதுமக்கள் பங்கேற்ற வீதி திருவிழா கோலாகலம்
x

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் சென்னை கொரட்டூர் கிழக்கு நிழல் சாலையில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை போதை இல்லா தமிழகம், போதை ஒழிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘வீதி திருவிழா’ கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை

சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விளையாட்டு, இசை, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கலந்து கொண்டனர்.

வாகன போக்குவரத்து இல்லாத சாலையின் மத்தியில் பல்லாங்குழி, செஸ், கிரிக்கெட், வாலிபால், சிலம்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை விளையாடினர். அதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

நாட்டுப்புற இசை மற்றும் மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளிலும் இளம்பெண்கள், சிறுமிகள் உள்பட பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர். போதை இல்லா தமிழகம் என்ற தலைப்பில் அங்கு வந்த பொதுமக்களுக்கு கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆவடி கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர்கள் மணிவண்ணன், அசோக் குமார் ஆகியோர் வீதி திருவிழாவை பார்வையிட்டனர். அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் மற்றும் மண்டல அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டு பொதுமக்களுடன் விளையாடி மகிழ்ந்தனர்.


Next Story