தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகலெக்டர் உமா எச்சரிக்கை


தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகலெக்டர் உமா எச்சரிக்கை
x

ஜேடர்பாளையம் பகுதியில் இரு சமுதாய பிரிவினருக்கு இடையேயான பிரச்சினையில் பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல்

தொடர் கண்காணிப்பு பணி

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூரை சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான 1,000 பாக்கு மரங்களை நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர். தொடர்ந்து அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட கலெக்டர் உமா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வருவாய்த்துறையை சார்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களும் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது, மக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடும் நடவடிக்கை

மேற்காணும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் அறியப்படின் உடனடியாக 9498181340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் இதுபோன்று இரு சமுதாய பிரிவினருக்கு இடையேயான பிரச்சினையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.


Next Story