பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை


பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை
x

நாமக்கல் மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் கூறினார்.

நாமக்கல்

சிறப்பு பேட்டி

சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது அமைதியை கெடுக்க அனுமதிக்க கூடாது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

சென்னை மாநாட்டில் கலந்து கொண்டு நாமக்கல் திரும்பிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

சட்டம்-ஒழுங்கு

கேள்வி:- நாமக்கல் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?

இந்த ஆண்டு இதுவரை பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 7,723 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 6,920 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 17 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றம்

கேள்வி:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?

பதில்:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 634 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு இதுவரை குழந்தைகளுக்கு எதிரான 50 வழக்குகளில் 31 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போக்சோ வழக்குகளில் 7 பேருக்கு சிறை தண்டனை பெற்று கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 76 வழக்குகள் பதிவுசெய்து, 90 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சமூக வலைதள குற்றங்கள்

கேள்வி:- சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?

பதில்:- சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக 7 பேர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆன்லைன் மோசடி தொடர்பாகவும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

770 புகார்களுக்கு தீர்வு

கேள்வி:- பொதுமக்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

பதில்:- நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 861 புகார் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் 770 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

போதை பொருட்கள்

கேள்வி:- போதை பொருட்கள் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கை என்ன?

பதில்:- நாமக்கல் மாவட்டத்தில் 74 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 63 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 509 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5,987 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

சாலை பாதுகாப்பு

சாலை விபத்துகளை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

பதில்:- பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாலை விதிகள் மற்றும் விபத்துகள் தொடர்பாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. சாலை ஓரங்களில் விழிப்புணர்வு பதாகைகள் நிறுவப்பட்டு உள்ளது. முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுவிலக்கு குற்ற தடுப்புக்கு விருது

நாமக்கல் மாவட்டத்தில் 2,761 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8,913 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் 14 கள்ள சாராய ஊறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,250 லிட்டர் கள்ளசாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டு உள்ளது. மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

எனவே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் குற்ற தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் பெற்றுக்கொண்டார்.


Next Story