குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை


குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை
x

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல்

ஒருங்கிணைப்பு கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புலம் பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலச்சட்டம் கடைபிடித்தல் குறித்து தொழிற்சாலை உரிமையாளர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் உமா பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், நல்ல முறையில் தொழில் வளர்ச்சி அடைய வேண்டும். இதர மாநிலங்களிலிருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். குழந்தை தொழிலாளர் இல்லாத தொழிற்சாலைகளாக இருக்க வேண்டும்.

மேலும் திருத்தியமைக்கப்பட்ட அரசின் வழிகாட்டுதல்படி, அதிகளவில் தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்தம், நீரழிவு போன்ற நோய்களின் தாக்கம் குறித்து கண்காணித்து, சரியான சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு வசதி செய்ய முடியாத இனங்களில், சுகாதார பணிகள் துணை இயக்குனரை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்கள்

இதற்காக தொழிற்சாலைகள் தனியே தொடர்பு அலுவலரை நியமனம் செய்து, விவரங்கள் அளிக்க வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பான இனங்களில், எந்த ஒரு பிரச்சினைக்கும் இடமளிக்காமல், நாமக்கல் மாவட்டத்திற்கு நல்ல பெயரினை பெற்று தர அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும், காவல் துறையால் கோரப்பட்டு உள்ளவாறு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை நிறுவனங்கள் அனைத்தும், தாங்கள் பணியமர்த்துகின்ற புலம் பெயர் தொழிலாளர்களின் முழுமையான விவரங்கள், புலம் பெயர் தொழிலாளர்களின் முழுமையான விவரங்கள், குடும்ப பின்னணி, அவசர சூழ்நிலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய குடும்ப உறவினர் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு அனைத்து பணியிடங்கள் மற்றும் தங்கும் இடங்களில் சுற்றுச்சுவர்கள் முறையாக அமைக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

கடுமையான நடவடிக்கை

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துறையின் மூலமாக புலம் பெயர் தொழிலாளர் தொடர்பாக பதிவு சான்று, தொழிற்சாலைக்கான முறையான உரிமம் ஆகியவற்றினை தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பெற்றிருக்க வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்களின் அடையாளங்கள் முறைப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், 5 பேருக்கு மேல் புலம் பெயர் தொழிலாளர் இருந்தால் உரிமம் பெறுவதற்கு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் தொழிற்சாலைகள் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் இல்லாதவையாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் இருப்பின் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (இணை இயக்குனர்) தினகரன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் திருநந்தன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story