டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மயக்க மருந்து-மாத்திரைகளை விற்றால் கடும் நடவடிக்கை
டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மயக்க மருந்து-மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னை,
மயக்கம் தரக்கூடிய மருந்து-மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவதால் அதனை டாக்டர்கள் பரிந்துரையின்றி யாருக்கும் வழங்க கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனால் இந்த உத்தரவை பெரும்பாலான மருந்து கடை உரிமையாளர்கள் முறையாக கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
அதே நேரத்தில் மருந்து கடை உரிமையாளர்களை மிரட்டி இது போன்ற மருந்து-மாத்திரைகள் வாங்கப்படுகிறது என்ற புகாரும் உள்ளது.
ஆலோசனை
இந்த நிலையில் மருந்து கடை உரிமையாளர்களை அழைத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர்கள் டி.எஸ்.அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் ரம்யா பாரதி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் மருந்து கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் வருமாறு:-
* அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளின்போது நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மயக்கம் தரக்கூடிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. இதனை கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கட்டாயம் எடுத்துரைக்க வேண்டும். மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட வேண்டும்.
* டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து-மாத்திரைகள் தரப்படாது என்று அனைத்து மருந்து கடைகளிலும் எச்சரிக்கையுடன் கூடிய நோட்டீசை ஒட்ட வேண்டும். மருந்துகள் விற்பனை செய்யும் விவரங்களை முறையாக பதிவேட்டில் பதிந்து பராமரிக்க வேண்டும்.
* அனைத்து மருந்து கடைகளிலும் சாலைகளை நோக்கியும், மருந்து கடைக்கு உள்ளேயும் கண்காணிப்பு கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும். மருந்து சீட்டுகளில் மருந்து வாங்கிய பின்பு 'டெலிவரிட்' என்ற சீல் அச்சிடப்பட வேண்டும்.
* சிறுவர்கள் தூக்க மாத்திரைகளை வாங்குவதற்கு டாக்டரின் பரிந்துரை கடிதம் கொண்டு வந்தாலும் அவர்களுக்கு வழங்கக்கூடாது.
சட்டப்படி நடவடிக்கை
* போதை தரும் மருந்து மற்றும் மாத்திரைகள் கேட்டு தொந்தரவு செய்பவர்கள், மிரட்டுபவர்கள் மீது போலீஸ் நிலையத்துக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* டாக்டரின் பரிந்துரை இல்லாமல் போதைக்கு பயன்படுத்தும் மருந்து-மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* சிறுவர்களுக்கு போதை தரும் மருந்துகளை விற்கும் மருந்து கடையின் விவரங்களை போலீஸ்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தெரிவிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
மேற்கண்டவாறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
கூரியர், பார்சல் நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மருந்து கடை உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் கூரியர், பார்சல் நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர். அவர்களுக்கு, 'பார்சல்கள் சாலை, ரெயில், விமானம் வழியாக சென்று டெலிவரி செய்வதால் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை அனுமதிக்காதவாறு மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்' என்று போலீஸ் உயரதிகாரிகள் அறிவுரைகள் வழங்கினர்.
இதனை மீறி செயல்படுவதோ அல்லது போதைப் பொருட்கள் மற்றும் சட்ட விரோத பொருட்களை அனுப்புவதற்கு துணை போகும் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.